R-I-P - மழையாலானவை



இரவை எப்படியாவது துரத்திவிடலாம் என்ற முனைப்புடன் கருமையை துளைத்துக் கொண்டு மண் நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றன மழை எனும் மகா அஸ்திரங்கள், தூறலாய் ஆரம்பித்த பொழுதில் ஆனத்தமாய் மண் வீசிய வாசனைகளை முகர்ந்து, அப்போதையில் பெய்யான பெய்து அம்மண் மீதே புரண்டோடிக்கொண்டிருக்கிறது பெருமழையொன்று..

துளியாய் துவங்கி தூறலாய் முடிந்தாலும், தூறலாய் ஆரம்பித்து பேயாட்டம் ஆடி ஓய்ந்தாலும், தட்டி எழுப்பும் மண் வாசனையோடு அடி மனதில் ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும் நினைவுக்குப்பைகளையும் மனக்காற்றில் வீசியடித்துவிட்டு செல்ல மறப்பத்தில்லை இந்த மழையெனும் மாயக்காரி.

வார்த்தைப் புழுதிகள் போக்கிடம் அறியாமல் மனக்காற்றில் சுற்றியலையும் வேளைகளில் தான், நான் வேறுவழியின்றி அவற்றை காகிதங்களிலோ, கணிணிகளிலோ கவிதைகள் என்ற பெயரில் சேகரிக்கத் துவங்குகிறேன். எத்தனை சிரத்தையுடன் அவ்வார்த்தைப் புழுதிகளை சேகரித்தாலும் அறிந்தோ அறியாமலோ சில வார்த்தைகளை எப்போதும் தவறவிட்டு விடுகிறேன்.

நான் இக்கணமும் அந்த வார்த்தைப் புளுதிகளைத்தான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன், வழக்கம் போலவே சிலவற்றை தவரவிட்டுக்கொண்டே.ஆகையால் இன்றும் கை, கால் இழந்து ஊனமுற்ற கவிதைகள் பிறக்கலாம். எல்லாம் சரியாய் அமைந்து ஆரோக்கியமாய் பிறக்கும் கவிதைகளுக்கே இங்கே வாழ வழியில்லை என்பதால் என் ஊனக்கவிதைகளை கருணைக்கொலை செய்துவிடலாம் என்றிருக்கிறேன். அது உங்கள் பார்வையில் கொலையாகப்படினும் எனக்கதில் ஆட்சேபனைமொன்றுமில்லை.

பெரும்பாலும் இதனை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையில் என் ஊனக்கவிதைகள் உயிரற்று சடலமாகியிருக்கலாம், ஆகையால் இப்போது நீங்கள் உங்களை கண்களை மூடி என் கவிதைகளுக்காக சில நொடிகளாவது அஞ்சலி செலுத்திவிடுங்கள்.

இனிவரும் ஏதேனும் மழைநாட்களில் என்றேனும் என் ஊனக்கவிதைகள் உங்கள் மனக்கதவுகளை தட்டினால் பதற்றத்துடன் என்னைத்தேடியலைந்து உங்கள் நேரத்தை விரயமாக்காமல் அவற்றை கொன்று புதைத்துவிட்டு எனக்கு சொல்லியனுப்புங்கள், நான் இங்கிருந்தபடியே அஞ்சலி செலுத்துகிறேன் என் மழைக்கவிதைகளுக்கு...

ஆமென் :(.




படம் : இணையத்திலிருந்து