பெருமழைக்காலம் - மழையாலானவை




து
ளி
து
ளியாய்
தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்த
மழையை
ரசித்துக்கொண்டிருந்தவள்,
பொறுமையிழந்து 
மெதுவாய் சாரளம் திறந்து
கைநீட்டி துளி தொட ஆரம்பித்த,
அடுத்த கணத்தில்
அதற்க்காகவே காத்திருந்தது போலவே
பெய்யெனப் பெய்யத் துவங்குகிறது
பெருமழையொன்று...

படம் : இணையத்திலிருந்து

பால்யகால கிரிக்கெட்


உங்களுக்கு எப்படியென்று தெரியவில்லை,  இது வரையில் நான் பார்த்த எந்த திரைப்படமும் என்னில எந்த மாற்றத்தையும் உருவாக்கியதில்லை இனி மேல் உருவாக்கப்போவதுமில்லை. திரைப்படங்கள் என்னைப் பொறுத்தவரையில் பொழுதுபோக்கிற்கான ஒரு அம்சமே தவிர வேறொன்றுமில்லை.மாறாக பல படங்கள் மனதில் அடி ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் நினைவுக்குப்பைகளை கிளறி விட்டு செல்வதுண்டு. சில காதல் படங்கள் மற்றும் பள்ளி கல்லூரி சம்மந்தப்பட்ட படங்கள் நம் மனதை விட்டு அகன்று விடுவதில்லை, அதற்கு பள்ளி கல்லூரிகளில் நாம் செய்த சேட்டைகளையும், காதலால் நாம் அனுபவித்த இன்ப துன்பங்களையும் பிரதிபலிப்பதும் தான் காரணமாக இருக்கும். இவ்வாறு நம்மை கவரும் சில படங்களை பார்க்கும் போது ஐயோ இந்த வாழ்வை தவற விட்டு விட்டோமே என்று வருத்தப்பட  வைப்பதுண்டு, பல படங்கள் நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டுமொருமுறை செல்ல மாட்டோமா என்று எங்க வைக்கவும் செய்யும். அவ்வாறு மனதின் நினைவுக்குப்பைளை கிளறிவிட்டு மீண்டுமொருமுறை வந்து செல்லாதா  அது போன்றொரு பொற்காலம் என்று தோன்ற வைத்தாது சமீபத்தில் பார்த்த 1983 என்ற மலையாள படம். 


கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் 1983 படம். கிரிக்கெட் மீதுள்ள  ஆர்வத்தால் தன படிப்பு, காதல் என  எல்லாவற்றையும் தொலைத்தவன் தன மகன் மூலம் கனவுகளை நனவாக்க முயற்சிப்பது போன்று வடிவமைக்கப்பட்ட படம். சொல்ல வந்த விசயங்களை தெளிவாக ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிவிட்டு கூடவே நம்மையும் கடந்த காலத்திற்குள் நாமறியாமல் நகர்த்திவிட்டு சென்று விடுகிறார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் பாத்திர தேர்வுகள். படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் நீங்கள்  சந்தித்திருக்கலாம்  ஒரு காலத்தில நீங்களும் ஒரு கிரிக்கெட் பைத்தியமாக கிரிக்கெட் பேட்டும் சைக்கிளுமாக சுற்றி திரிந்தவர்களாக இருந்திருந்தால்.

 
நாங்கள் 96 களில் தென்னை மட்டை மற்றும் பிளாஸ்டிக் பந்துகள் வைத்து வீட்டு காம்பவுண்ட் சுவர் அல்லது மரத்தில ஸ்டம்ப்ஸ் வரைந்து ஆரம்பித்த கிரிக்கெட்  எங்கள் வீட்டு முற்றங்களை  தாண்டியதில்லை. இன்று நம்மை ஆக்கிரமித்திருக்கும் அதிநவீன பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால் விளையாட்டு வீரர்களுக்கு பஞ்சமே இருக்காது. விடுமுறை நாட்கள் என்றால்  நாங்களே ராஜாக்கள் நாங்களே மந்திரிகள், 98-களின் துவக்கத்தில் தான் நாங்கள் முற்றைத்தை விட்டு காலியிடங்கள் தேடி புறப்பட ஆரம்பித்தோம். இந்த காலகட்டத்தில் தான் அதுவரை பாடங்களில் அண்டை நாடாக நாங்கள் அறிந்திருந்த பாகிஸ்தான் எங்களுக்கும் எதிரி நாடாக மாற்றியது.   

எங்கு நோக்கினும் பச்சை பசேலென மரங்கள் படர்ந்திருக்கும் எங்கள்  ஊரில் விளையாடுவதற்கு ஏற்ற காலியிடங்களை தேடிப்பிடிப்பதென்பது சாதாரண விஷயமில்லை. ஒரு பிட்ச் வைக்குமளவிற்கு இடம் கிடைத்தாலே அந்த இடத்தில் கூடாரம் அமைத்து விடுவோம். ஆள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் சிறிய இடங்கள் வசப்பட்டாலும்   ஒன்  பிச் கேட்ச், சிக்ஸ் அடித்தால் அவுட் என்று இட வசதிக்கேற்ப விளையாட்டை வடிவமைப்போம். விடுமுறை நாட்களில் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும், நேரமும் அதிகமாக இருப்பதால் இது போன்ற சிறிய இடங்களை காலி செய்து வேறு இடம் தேட ஆரம்பித்து விடுவோம்.வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் போர்க்களமும் அதற்க்கு தகுந்தாற்போல இருந்தால் தானே நன்றாக இருக்கும். 


 
இந்த இடம் தான்  என்று இல்லாமல் வயல், வற்றிப்போன குளம், தென்னந்தோப்புகள், கோவில் மைதானங்கள், மயான பூமிகள்  என எல்லா இடங்களிலும் எங்கள் ராஜ்ஜியம் நடக்கும். பெரும்பாலும் நாங்கள் விரும்பி தேர்ந்தெடுப்பது எளிதில் யாரும் சொந்தம் கொண்டாட வராத வகையில் ஏதாவது பிரச்னையால் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டிருக்கும் நிலங்ககளாகத் தான் இருக்கும். யாருடனாவது பெட்டிங் மேட்ச் என்றால் அது எங்கள் ஊர் பள்ளி மைதானத்தில் தான் நடக்கும்,  சில சமயம் யார் எந்த டீம், யார் அடித்த பந்து வருகிறது என்று கூட தெரியாத அளவிற்கு ஒரே நேரத்தில் நான்கைந்து மெட்ச்களும் நடக்கும்.
 
ஊரில் தென்னை மரங்களுக்கு பஞ்சமில்லை என்பதால் ஆரம்ப காலத்தில் தென்னை மட்டையில் செதுக்கப்பட்ட பேட்களுக்கு பஞ்சமிருக்காது. பிளாஸ்டிக் பந்துகளிலிருந்து ரப்பர் பந்துகளுக்கு மாறும் போது தான் தென்னைமட்டை பேட்களின் பலவீனம் புரிந்து  மெதுவாக மரப்பலகைகளை தேடியெடுத்து அவற்றை செதுக்கி விளையாட ஆரம்பித்தோம்.  பின்னர்  சிறுக சிறுக பணம் சேர்த்து எங்கள் டீமுக்கென ! ஒரு நல்ல  பேட் வாங்கினோம்.

 
அந்த காலத்தில் நாங்கள் மிகவும் மெனக்கெடவும் கவலை கொள்ளவும் வேண்டியிருந்தது பந்துகளுக்காக தான். மற்ற அணிகளுடன் போட்டியிடும் போதும் எங்களுக்கு பந்தையப்பொருளும் பெரும்பாலும் பந்தாகத தானிருக்கும். பந்து வாங்குவதற்கென்றே வசூல் வேட்டைகள் நடக்கும், பந்துகளின் விலை 7 ரூபாயிலிருந்து 10 ரூபாய்க்குள் தான் இருக்குமென்பதால்   ஆள் ஒன்றிக்கு 50 காசு அல்லது ஒரு ரூபாய் தான் அதிகபட்சமாக இருக்கும். (இப்போது வழக்கொழிந்துவிட்ட 50 காசெல்லாம்  அப்போ  எங்களுக்கு பெரிய காசுப்பா)   இதற்க்கு காசு தராதவர்களை காசு தரும் வரையில் டீமில் சேர்க்க கூடாதென்று சட்டமும் இருந்தது. பந்து வாங்கும் போது எங்களின் விருப்பத்தேர்வு "stumper" பந்துகளாகத் தானிருக்கும்.  மற்ற பந்துகளை  இவையே கொஞ்சம் அதிகம் தாக்குபிடிக்க கூடியவை.  இப்படி இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன சொல்வதற்கு.

படாத இடத்தில் பட்டு ஹாஸ்பிட்டல் போய் அங்கு இருந்த லேடி டாக்டடிடம் என்ன சொல்வதென்று புரியாமல் முழித்த நாட்கள், காரணமேயில்லாமல் உருவாகும் சண்டைகள் , கிரிக்கெட்டால் ஊர் தாண்டியும் கிடைத்த நண்பர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் ஊர் சுற்றுவதற்கு எங்களுக்கு இருந்த சுதந்திரம், எங்களை சுமந்து திரிந்த சைக்கிள்கள், அவுட் ஆனாலும் இல்லையென்று சிறுபிள்ளைகள் போல சாதிக்கும் பெருசுகள், செவனேன்னு ஓரமா போகிறவர்கள் மீது பந்தடித்து விட்டு திட்டுகள் வாங்கியது, உடைத்த வீட்டுக்கூரை ஓடுகள் மற்றும் பல்புகள், தோப்புகளில் விளையாடும் பொது யாருமறியாமல் காணாமல் போகும் இளநீர் குலைகள், ஆசை ஆசையாய் வாங்கிய பேட், பரிட்சை நேரங்களில் விளையாட விதிக்கப்படும் தடைகள், அதையும் மீறி விளையாடப்போனதால் வெட்டி சின்னாபின்னமாக்கப்பட்ட பேட்,  கிரிக்கெட் வீரர்களின் விவரங்களை அச்சடித்து வரும் அட்டைகளை சேகரிப்பதற்காகவே வாங்கப்படும் "Big Fun" bubble gums, செய்திதாள்களில் வரும் கிரிக்கெட் வீரர்களின் படத்தை நோட்டுபுத்தகங்களில் ஒட்டியதால் பள்ளியில் ஆசிரியரிடமிருந்து வாங்கி கட்டிக்கொண்டவை, மழைக்காலங்களில் வயலில் முட்டியளவு தண்ணீரில் விளையாடும் கிரிக்கெட், நடுரோட்டில் விளையாடி ஊர்வம்பை விலைக்கு வாங்குவது...... என்று  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் கிரிக்கெட் பற்றிய நினைவுகளை.
 

இன்று களமிறங்கி கிரிக்கெட் விளையாடுபவர்களை விட, மொபைலில் விரல் வித்தை காட்டி கிரிக்கெட் விளையாடுபவர்களும், டிவிக்கு முன்னால் அமர்ந்து நொறுக்குத்தீனியையும்  வைத்துக் கொண்டு என்னய்யா இது இவனுக்கு அடிக்கவே தெரியல அங்கே  அடிக்க வேண்டிய பந்தை இங்கே அடிக்கிறான் பாரு, அந்த பந்தை இப்படி திருப்பி விட்டிருக்கலாம், இந்த கேட்சை ரெண்டடி முன்னால்  போய்  நாலடி அந்தரத்தில் பறந்து பிடித்திருக்கலாம் என்று வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் பிதாமகர்களே அதிகமாக உள்ளனர்.
 
கிரிக்கெட்  எங்கள் பால்ய காலத்தை ஆக்கிரமித்திருந்தது, நாங்கள் கிரிக்கெட்டை காதலித்தோம்.